

- 37
- Episodes
- 2022
- First episode
About இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்
இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும் Podcast
- Publisher
- RJ SHAKTHI
- Category
- history
- Language
- ta
- Explicit
- No
- First episode
- 4 Jul 2022
- Latest episode
- 21 Sept 2022
Latest episodes
37 episodes in the feed.

21 Sept 2022
PS-S1E33-பொன்னியின் செல்வன்/E33-மரத்தில் ஒரு மங்கை!(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Marathil Oru Mangai! / Puthu Vellam
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Marathil Oru Mangai! -- கோட்டைத் தளபதியின் இரு ஆட்களும் தன் இரண்டு பக்கத்தில் வர, வந்தியத்தேவன் தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான். தான் தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்ளவே அவர்கள் தன்னுடன் வருகிறார்கள் என்பதைப் பற்றி அவனுக்கு சந்தேகம் இருக்கவில்லை. கோட்டை வாசல் வழியாக வெளியே யாரையும் போக விடாமல் பார்த்துக் கொள்ளும்படி கட்டளை பிறந்திருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும் அவன் அன்று முன்னிரவுக்குள் தப்பிச் சென்றே தீரவேண்டும். பெரிய பழுவேட்டரையர் வந்துவிட்டால், பிறகு தப்பித்துச் செல்வது இயலாத காரியம்; உயிர் பிழைத்திருப்பதே முடியாத காரியமாகிவிடும்! ஆகவே, தஞ்சாவூர் கோட்டைக்குள் வந்தியத்தேவன் அங்குமிங்கும் அலைந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, அவனுடைய மனம் தப்பிச் செல்லும் வழிகளைப் பற்றி ஆலோசித்துக் கொண்டேயிருந்தது. முதலில் இந்த யமகிங்கரர்களிடமிருந்து தப்ப வேண்டும்; பின்னர், கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வேண்டும். எப்படித் தப்புவது? அதுதான் தெரியவில்லை. பார்க்கப்போனால் இவர்களிடமிருந்து தப்புவது பெரிய காரியமில்லை. இரண்டு பேரையும் ஒரு வினாடி நேரத்தில் தாக்கிக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிடலாம். ஆனால் எங்கே ஓடுவது? தஞ்சைக் கோட்டையைப் பழுவேட்டரையர்கள் எவ்வளவு பலப்படுத்திக் கட்டியிருக்கிறார்கள் என்பது நாடறிந்த செய்தி. அவர்களுடைய அனுமதியின்றித் தஞ்சைக் கோட்டைக்குள் காற்றுக்கூட நுழைய முடியாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். யமனும் வரமுடியாது என்று சக்கரவர்த்தியே இன்று காலையில் சொன்னார். அத்தகைய கோட்டையிலிருந்து எப்படிச் செல்வது? இந்த இருவரையும் தொட வேண்டியதுதான்; அவர்கள் உடனே கூச்சல் கிளப்பிவிடுவார்கள். அடுத்த கணத்தில் தான் பாதாளச் சிறைக்குப் போக நேரிடும்; அல்லது உயிரிழக்க நேரிடும். இவர்களைத் தாக்குவதில் பயனில்லை; தாக்காமல் தந்திரத்தினாலேயே தப்பிக்க வேண்டும். அப்படித் தப்பித்த பிறகு கோட்டையிலிருந்து வெளியேற வழி தேட வேண்டும். எவ்வளவு பலமான கோட்டையாயிருந்தாலும் இரகசியச் சுரங்கவழி இல்லாமற் போகாது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? அது யாருக்குத் தெரிந்திருக்கும்? தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தாலும், தனக்குச் சொல்வார்களா? இப்படிப் பலவகையாகச் சிந்தித்துக் கொண்டே நடந்த போது, சட்டென்று பழுவூர் இளையராணியின் நினைவு வந்தது. ஆகா! அந்தக் கோட்டைக்குள் யாராவது தனக்கு உதவி செய்வதாயிருந்தால், அந்த மாதரசிதான் செய்யக்கூடும். அதுவும் சந்தேகந்தான். ஆனால் ஆழ்வார்க்கடியானின் பெயரைச் சொல்லி ஏதேனும் தந்திர மந்திரம் செய்து பார்க்கலாம். அப்படிப் பார்ப்பதற்கு முதலில் பெரிய பழுவேட்டரையரின் அரண்மனையைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்தாலும், தான் அங்கே ராணியைப் பார்க்கச் செல்வது இந்தத் தடியர்களுக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் இவர்கள் போய்ச் சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிவிடுவார்கள். அதிலிருந்து என்ன விபரீதம் நேருமோ, யார் கண்டது? ஒருவேளை, பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில் இருக்கும்போது அவரே வந்துவிட்டால் என்ன செய்வது? சிங்கத்தின் குகைக்குள் நாமாகச் சென்று தலையைக் கொடுப்பது போல ஆகுமே? வந்தியத்தேவனுடைய மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய வாயும் கண்களும் சும்மா இருந்துவிடவில்லை. பின்னோடு வந்தவர்களை "அது என்ன? இது என்ன?", "அது யார் அரண்மனை?", "இது யார் மாளிகை?", "இது என்ன கட்டடம்?", "அது என்ன கோபுரம்?" என்றெல்லாம் அவன் வாய் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவனுடைய காதுகள், "இது பெரிய பழுவேட்டரையர் அரண்மனை" அல்லது "பழுவூர் இளையராணி அரண்மனை" என்ற மறுமொழி வருகிறதா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தன. அவனுடைய கண்களோ அப்புறமும் இப்புறமும் நாலாபுறமும் கவனமாகப் பார்த்துக் கொண்டு வந்தன. அப்படிப் பார்த்து வந்தபோது ஒரு விஷயம் அவன் கண்கள் வழியாக மனத்தில் நன்கு பதிந்தது. கோட்டைக்குள்ளே பிரதான வீதிகள் விசாலமாயும் ஜனப் போக்குவரவு நிறைந்ததாயும் இருந்தபோதிலும் சந்து பொந்துகளும் ஏராளமாயிருந்தன. மரமடர்ந்த தோட்டங்களும் அதிகமாயிருந்தன. அந்தச் சந்து பொந்துகளின் வழியாகச் சென்று அடர்ந்த தோட்டங்களுக்குள் புகுந்து மறைந்து கொள்வது அசாத்தியமான காரியம் அல்ல. ஒரு நாள், இரண்டு நாள் கூடத் தலைமறைவாக இருப்பது சாத்தியந்தான். ஆனால் யாரும் பாராத சமயத்தில் மறைந்து கொள்ள வேண்டும்; யாரும் தேடாமலும் இருக்க வேண்டும். சின்னப் பழுவேட்டரையர் அவருடைய கணக்கற்ற ஆட்களைத் தேடுவதற்கு ஏவிவிட்டால் மறைந்திருப்பது சாத்தியமல்ல. அல்லது யாருடைய வீட்டுக்குள்ளாவது புகுந்து அடைக்கலம் பெற வேண்டும்.

21 Sept 2022
PS-S1E32-பொன்னியின் செல்வன்/E32-பரிசோதனை(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Parisothanai / Puthu Vellam
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Parisothanai -- சின்னப் பழுவேட்டரையரைக் கண்டதும் வந்தியத்தேவன் சண்டையை நிறுத்திவிட்டு அவரை நோக்கி நடந்தான். காவலர்கள் எழுந்து ஓடி வந்து அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களை அவன் சிறிதும் இலட்சியம் செய்யாமல் நாலு அடி முன்னால் நடந்து வந்து, "தளபதி! நல்ல சமயத்தில் தாங்கள் வந்து சேர்ந்தீர்கள். இந்தப் பக்காத் திருடர்கள் என்னுடைய உடைமைகளைத் திருடிக் கொண்டதுமல்லாமல், என்னையும் கொல்லப் பார்த்தார்கள்! விருந்தாளியை இப்படித்தானா நடத்துவது? இதுவா தஞ்சாவூர் சம்பிரதாயம்? நான் தங்களுக்கு மட்டும் விருந்தாளியல்ல, சக்கரவர்த்திக்கும் விருந்தாளி; சக்கரவர்த்தினி சொன்னதைத்தான் தாங்களும் கேட்டீர்களே! பட்டத்து இளவரசரிடமிருந்து ஓலை கொண்டு வந்த தூதன். அப்படிப்பட்ட என்னை இந்தப் பாடுபடுத்துகிறவர்கள் மற்றவர்களை என்ன செய்து விட மாட்டார்கள்! இப்படிப்பட்ட திருடர்களைத் தங்கள் பணி ஆட்களாக வைத்துக் கொண்டிருப்பது பற்றி ஆச்சரியப்படுகிறேன். எங்கள் தொண்டை மண்டலத்தில் இப்படிப்பட்ட திருடர்களை உடனே கழுவில் ஏற்றிவிட்டு மறுகாரியம் பார்ப்போம்!" என்று சரமாரியாய்ப் பொழிந்தான். மூன்று வீரர்களை ஏக காலத்தில் எதிர்த்துப் புரட்டிக் கீழே தள்ளிய வாலிபனுடைய வீரச் செயலைப் பற்றிய வியப்பு இன்னும் பழுவேட்டரையரின் மனத்தை விட்டகலவில்லை. இத்தகைய வீரனை நாம் நமது காவற் படையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை அவருக்கு அதிகமாயிற்று. எனவே, அவர் சாந்தமான குரலில், "பொறு! தம்பி! பொறு! அப்படியெல்லாம் இவர்கள் செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை! இவர்களை விசாரித்துப் பார்க்கிறேன்!" என்றார். "நான் கோருவதும் அதுதான்! இவர்களை விசாரியுங்கள்; விசாரித்து நீதி வழங்குங்கள்! என்னுடைய உடையும் உடைமையும் என்னிடம் திரும்பி வருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்!" என்றான் வல்லவரையன். "அடே! அந்தப் பிள்ளையை விட்டு விட்டு இப்படி வாருங்கள்! நான் சொன்னது என்ன? நீங்கள் செய்தது என்ன? இவன் மீது ஏன் கை வைத்தீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார் கோட்டைத் தளபதி. "எஜமானே! தாங்கள் சொன்னது சொன்னபடியே செய்தோம். இவரை எண்ணெய் முழுக்காட்டிப் புதிய ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிவித்தோம்; அறுசுவை உண்டி அளித்தோம். சித்திர மண்டபத்துக்கும் அழைத்து வந்தோம்! இவர் சிறிது நேரம் சித்திர மண்டபத்தில் உள்ள சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென்று நினைத்துக் கொண்டு இவருடைய பழைய உடைகளைக் கேட்டார். உடனே எங்களைத் தாக்கவும் ஆரம்பித்தார்!" என்றான் அவ்வீரர்களில் ஒருவன். "ஒரு சிறு பிள்ளையிடமா மூன்று தடியர்கள் அடிபட்டு விழுந்தீர்கள்?" என்று கூறி இரத்தக் கனல் வீச விழித்துப் பார்த்தார். "எஜமான்! அரண்மனை விருந்தாளியாயிற்றே என்று யோசித்தோம். இப்போது சற்று அனுமதி கொடுங்கள்; இவனை உடனே வேலை தீர்த்துவிடுகிறோம்." "போதும் உங்கள் வீரப் பிரதாபம்! நிறுத்துங்கள்! தம்பி!... நீ என்ன சொல்லுகிறாய்?" "இவர்களுக்கு அனுமதி கொடுங்கள் என்றுதான் சொல்கிறேன். எனக்கும் அனுமதி கொடுங்கள். சோழ குலத்துப் பகைவர்களோடு போராடிக் கொஞ்சம் நாள் ஆயிற்று. தோள்கள் தினவெடுக்கின்றன. அரண்மனை விருந்தாளிகளை எப்படி நடத்த வேண்டுமென்று இவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றேன்!" என்றான் நமது வீரன். சின்னப் பழுவேட்டரையர் புன்னகை புரிந்து, "தம்பி! உன் தோள் தினவைத் தீர்த்துக் கொள்வதைச் சோழப் பகைவர்களோடேயே வைத்துக் கொள்! சக்கரவர்த்தி நோய்வாய்ப்பட்டிருக்கும் நிலையில் தஞ்சைக் கோட்டைக்குள் இவ்விதம் சண்டை, சந்தடி ஒன்றும் உதவாது என்று கட்டளை!" என்று சொன்னார். "அப்படியானால் என்னுடைய உடைகளையும் உடைமைகளையும் உடனே கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்கள்!" "எங்கேடா அவை?" "எஜமான்! தங்கள் கட்டளைப்படி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம்." "தளபதி! இவர்கள் எப்படிப் புளுகுகிறார்கள், பாருங்கள்! சற்றுமுன் உடைகளை வெளுக்கப் போட்டிருப்பதாய்ச் சொன்னார்கள். இப்போது தாங்கள் 'பத்திரப்படுத்தி' வைக்கச் சொன்னதாகக் கூறுகிறார்கள். சற்றுப் போனால் தங்களுக்கே திருட்டுப் பட்டம்கூடக் கட்டி விடுவார்கள்!" என்றான் வந்தியத்தேவன். தளபதி காவலர்களைப் பார்த்து, "முட்டாள்களா! இந்தப் பிள்ளைக்கு புது ஆடைகள் கொடுக்கும்படி மட்டுந்தானே சொன்னேன்? பழையவைகளைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவில்லையே?... இந்த மூடர்கள் என்னவோ உளறுகிறார்கள், தம்பி! போனால் போகட்டும், பழைய உடைகளைப் பற்றி எதற்காக இவ்வளவு கவலைப்படுகிறாய்? அதற்குள் ஏதாவது உயர்ந்த பொருள் வைத்திருந்தாயோ?" என்று கேட்டார். "ஆம்; வழிநடைச் செலவுக்காகப் பொற்காசுகள் வைத்திருந்தேன்..." என்று வந்தியத்தேவன் சொல்வதற்குள், "அதற்காக நீ கவலைப்பட வேண்டாம்.

7 Sept 2022
PS-S1E31-பொன்னியின் செல்வன்/E31-திருடர்! திருடர்!(S1-புது வெள்ளம்) - Ponniyin Selvan / Thirudar! Thirudar! / Puthu Vellam
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன்; RJ Shakthi யின் குரலில்.. Ponniyin Selvan / Puthu vellam / Thirudar! Thirudar! -- விஜயாலய சோழர் முதல், இரண்டாம் பராந்தகராகிய சுந்தர சோழர் வரையில் சோழ மன்னர்களின் உயிர்ச் சித்திரங்களை நம் வீரன் வந்தியத்தேவன் பார்த்து மகிழ்ந்தான். ஆஹா! இவர்களில் ஒவ்வொருவரும் எப்பேர்ப்பட்டவர்கள்? எத்தகைய மஹாவீரர்கள்! உயிரைத் திரணமாக மதித்து எவ்வளவு அரும்பெரும் செயல்களை இயற்றியிருக்கிறார்கள்! கதைகளிலும் காவியங்களிலும் கூட இப்படிக் கேட்டதில்லையே? இத்தகைய மன்னர் பரம்பரையைப் பெற்ற சோழ நாடு பாக்கியம் செய்த நாடு; இன்று அவர்களுடைய ஆட்சியின் கீழ் உள்ள நாடுகள் எல்லாம் பாக்கியம் செய்த நாடுகள்தாம். மேற்கூறிய சோழ மன்னர்களின் சரித்திரங்களைச் சித்திரித்த காட்சிகளில் இன்னொரு முக்கியமான அம்சத்தை வந்தியத்தேவன் கவனித்தான். ஒவ்வொரு சோழ அரசருக்கும் பழுவூர்ச் சிற்றரசர் வம்சத்தினர் தலைசிறந்த உதவிகள் செய்திருக்கிறார்கள்; வீரத் தொண்டுகள் பல புரிந்து வந்திருக்கிறார்கள். முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர். இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்தபோது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர். ஆதித்த சோழன் யானை மீது பாய்ந்து பல்லவ அபராஜிதவர்மனைக் கொன்றபோது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர். பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக் கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள். இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும் போது அவனை ஒரு பழுவேட்டரையர் தன் மடியின் மீது போட்டுக் கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார். அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தாம். இதையெல்லாம் சித்திரக் காட்சிகளில் பிரத்யட்சமாகப் பார்த்த வல்லவரையன் சொல்ல முடியாத வியப்பில் ஆழ்ந்தான். அண்ணன் தம்பிகளான பழுவேட்டரையர்கள் இன்று சோழ நாட்டில் இவ்வளவு ஆதிக்கம் வகிப்பதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சுந்தர சோழர் எது விஷயத்திற்கும் அவர்களுடைய யோசனையைக் கேட்டு நடப்பதிலும் வியப்பில்லை. ஆனால், தான் இப்போது பெரிய சங்கடத்தில் அகப்பட்டுக்கொண்டிருப்பது என்னவோ நிச்சயம். சின்னப் பழுவேட்டரையருக்குத் தன் பேரில் ஏதோ சந்தேகம் ஜனித்துவிட்டது. பெரியவர் வந்து விட்டால் அந்தச் சந்தேகம் ஊர்ஜிதமாகி விடும். முத்திரை மோதிரத்தின் குட்டு வெளியாகிவிடும். பிறகு தன்னுடைய கதி அதோகதிதான்! சின்னப் பழுவேட்டரையரின் நிர்வாகத்திலுள்ள தஞ்சாவூர் பாதாளச் சிறையைப் பற்றி வல்லவரையன் கேள்விப்பட்டிருந்தான். அதில் ஒருவேளை தன்னை அடைத்து விடக்கூடும். பாதாளச் சிறையில் ஒருவனை ஒரு தடவை அடைத்து விட்டால், பிறகு திரும்பி வெளியேறுவது அநேகமாக நடவாத காரியம். அப்படி வெளியேறினாலும், எலும்பும் தோலுமாய், அறிவை அடியோடு இழந்து, வெறும் பித்துக்குளியாகத்தான் வெளியேற முடியும்! ஆகா! இத்தகைய பேரபாயத்திலிருந்து தப்புவது எப்படி? ஏதாவது யுக்தி செய்து பெரியவர் வருவதற்குள்ளே கோட்டையையை விட்டு வெளியேறி விடவேண்டும். பழுவூர் இளையராணியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை கூட நம் வீரனுக்கு இப்போது போய் விட்டது. உயிர் பிழைத்து, பாதாளச் சிறைக்குத் தப்பி, வெளியேறி விட்டால் போதும்! ஓலையில்லாவிட்டாலும் குந்தவைப் பிராட்டியை நேரில் பார்த்துச் செய்தியைச் சொல்லி விடலாம். நம்பினால் நம்பட்டும்; நம்பாவிட்டால் போகட்டும்; ஆனால் தஞ்சைக் கோட்டையை விட்டு வெளியேறுவதற்கு என்ன வழி? தான் உடுத்தியிருந்த பழைய ஆடைகள் என்ன ஆயின என்ற சந்தேகம் திடீரென்று வந்தியத்தேவன் மனத்தில் உதயமாயிற்று. தன்னுடைய உடைகளைப் பரிசீலனை செய்து பார்ப்பதற்காகவே தனக்கு இவ்வளவு உபசாரம் செய்து புது ஆடைகளும் கொடுத்திருக்கிறார்கள்! குந்தவை தேவியின் ஓலை தளபதியிடம் அகப்பட்டிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தான் புலவர்களுடன் திரும்பிப் போய்விடா வண்ணம் தன் கையை இரும்புப் பிடியாக அவர் பிடித்ததின் காரணமும் இப்போது தெரிந்தது. ஓர் ஆளுக்கு மூன்று ஆளாய்த் தன்னுடன் அனுப்பிய காரணமும் தெரிந்தது. ஆகா! ஒரு யுக்தி! உடனே ஒரு யுக்தி கண்டுபிடிக்க வேண்டும்! -- இதோ தோன்றிவிட்டது ஒரு யுக்தி! பார்க்க வேண்டியதுதான் ஒரு கை! வீரவேல்! வெற்றிவேல்!
Contact இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்
- Guest appearances
- Does not typically book guests
Based on episode analysis; this does not confirm that the show is currently accepting guests.
Host of இந்திய இதிகாச, சரித்திரக் கதைகளும் கதாபாத்திரங்களும்?
Claim your podcast to manage its listing and keep your show details accurate.
Pod Engine is an independent podcast discovery and analytics service and is not affiliated with or endorsed by this podcast. Artwork and show content belong to their owners. Full legal notice.
Explore this show
Podcast research with Pod Engine